செய்திகள்
பூண்டி ஏரி

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2019-10-21 06:34 GMT   |   Update On 2019-10-21 06:34 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வறண்டன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல்குவாரி நீர் மற்றும் விவசாய கிணற்று நீரை எடுத்து குடிநீர் தேவையை சமாளித்து வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் இறுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் 637 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இதுவரை வறண்டு கிடந்த குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து 1063 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது இதே நாளில் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

தற்போது சென்னை குடிநீர் தேவைக்காக 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு மற்றும் பருவமழையை கருத்தில் கொண்டு இந்த மாத இறுதியில் தண்ணீர் சப்ளையை 100 மி.லிட்டர் வரை அதிகரித்து 625 முதல் 650 மி.லிட்டர் வரை வினியோகிக் குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News