செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா

இந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை

Published On 2020-12-03 10:13 GMT   |   Update On 2020-12-03 10:13 GMT
தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கான பணிகள், மத்திய மற்றும் மாநில அளவில் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதி சோதனை கட்டத்தில் உள்ளன. இந்த மாதத்தின் இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் அவசர பயன்பாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற முடியும் என்று நம்புகிறோம்.

மருந்தை குளிர்நிலையில் பராமரித்தல், மருந்துகளை இருப்பு வைக்கும் பொருத்தமான இடங்கள்,  யுக்திகளை உருவாக்குதல், தடுப்பூசிகளைப் போடுவதற்கு பயிற்றுவித்தல் மற்றும் சிரிஞ்ச்கள் கிடைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கான பணிகள், மத்திய மற்றும் மாநில அளவில் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.

ஆரம்பத்தில், அனைவருக்கும் கொடுக்க போதுமான அளவுகளில் தடுப்பூசி கிடைக்காது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு முதலில்தடுப்பூசி போடும் வகையில் முன்னுரிமை பட்டியல் தேவை. முதியவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடவேண்டும்.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தரவுகள் காட்டுகின்றன. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சமரசம் செய்யப்படவில்லை. சுமார் 80,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதில், குறிப்பிடத்தக்க கடுமையான பாதகமான பக்கவிளைவுகள் எதுவும் காணப்படவில்லை. 

தற்போது கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த 3 மாதங்களுக்குள், பெரிய மாற்றத்தை நெருங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News