செய்திகள்
பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

அரசு நலத்திட்ட உதவிகளை கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2021-01-10 03:46 GMT   |   Update On 2021-01-10 03:46 GMT
அரசு நலத்திட்ட உதவிகளை கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற 'சமத்துவப் பொங்கல் விழா' நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி, அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜி.கே.எம். காலனி 27-வது தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி மூலதன நிதி ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி 11 ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தார். கொளத்தூர் பகுதியை சேர்ந்த 1, 600 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும், தை பிறக்கப்போகிறது, விரைவில் வழியும் பிறக்கப்போகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த 4 மாதங்களில் நமக்கு வழி பிறக்கப்போகிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை, எத்தனையோ சான்றுகளை நம்மால் எடுத்துச் சொல்ல முடியும்.

நம்முடைய கடமையை, நம்முடைய பணியை, நம்முடைய உழைப்பை, நம்முடைய ஆற்றலை, நாம் ஆற்ற வேண்டிய செயல்பாட்டை, கவனத்தோடு மிகச் சிறப்பான வகையில் ஆற்றிட வேண்டும். ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அந்தப் பணியை நீங்கள் நிறைவேற்றினால் தான் தமிழ்நாட்டிற்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.

ஏதோ, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்கள் வரும் நேரத்தில் மட்டுமின்றி, மக்களுக்கு இன்னல்கள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிற போதும், மழை வரும் போதும், புயல் வரும் போதும் மக்களுக்குத் துணை நின்று நலத்திட்ட உதவிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். 10 ஆண்டு காலமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லாத நேரத்திலும் நாம் செய்த உதவிகளை நாட்டில் எந்த கட்சியும் செய்யவில்லை.

கொரோனா காலத்தில், உலகத்தில் யாரும் செய்ய முடியாததை “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தின் மூலமாக நாம் செய்து காட்டி இருக்கிறோம். மக்களுக்குக் கொடுக்கும் அந்த நலத்திட்ட உதவிகளைக் கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் தான் இன்றைக்கு அவர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால், இது அரசியல் நோக்கத்தோடு நடத்துகிற விழா அல்ல; குடும்ப பாச உணர்வோடு நாம் நடத்தும் விழா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News