செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்- கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-22 03:24 GMT   |   Update On 2020-11-22 03:24 GMT
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி:

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. 1.1.2021-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்த, அதாவது 1.1.2003-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் பெயர் உள்ளதா என்றும் அதில் திருத்தம் உள்ளதா என்றும் பார்வையிட்டனர். அத்துடன் திருத்தம், பெயர் சேர்த்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பித்தனர்.

ஊட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தாலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. ஊட்டியில் அரசு உதவி பெறும் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் நபர்களுக்கு படிவங்களை வழங்கினார்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் இடத்துக்கே வீடு, வீடாக சென்று மீண்டும் ஒரு முறை வாக்காளர்களின் நீக்கம் தொடர்பான விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து வாகனங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 360 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 683 வாக்குச்சாவடிகளிலும் இன்றும் (நேற்று) நாளையும் (இன்று) சிறப்பு முகாம் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, தாசில்தார் குப்புராஜ், நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News