செய்திகள்
பாஜகவில் இணைந்த மிஹீர் கோஸ்வாமி (இடதுபக்கம்)

அடுத்தடுத்து திருப்பங்கள்: பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Published On 2020-11-27 16:05 GMT   |   Update On 2020-11-27 16:05 GMT
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிஹீர் கோஸ்வாமி கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் தற்போது முதலே அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் முக்கிய கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தற்போதில் இருந்தே தேர்தல் தொடர்பான பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டன. 

அரசியல் கட்சி கூட்டங்கள் ஒரு பக்கம் நடந்து வரும் போதும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி விட்டு கட்சி தாவும் வேலையிலும் இறங்கியுள்ளனர். பல எம்.ஏல்.ஏ.க்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேர்ந்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் தெற்கு கோச்ட்பிஹர் தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிஹீர் கோஸ்வாமி. இவர் சுமார் 22 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் பாஜக தலைவர் ஒருவரை சந்தித்துள்ளார். அன்று முதல் மிஹீர் பாஜகவில் இணையப்போவதாக கருத்துக்கள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக அவர் கடந்த 31-ம் தேதி திரிணாமுல் கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் திரிணாமுல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த மிஹீர் கோஸ்வாமி இன்று பாஜகவில் இணைந்தார். கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன? என மம்தா பானர்ஜி என்னிடம் கேட்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக நான் உணருகிறேன்.

அதனால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்ததாக மிஹூர் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற கோஸ்வாமி பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்காள போக்குவரத்துத்துறை அமைச்சருமான சுவேந்து அட்ஹிகாரி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News