ஆன்மிகம்
திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Published On 2020-09-02 09:41 GMT   |   Update On 2020-09-02 09:41 GMT
திருச்சி அம்மா மண்டபத்தில் தர்ப்பணம், இறுதிசடங்குகளுக்கு வந்திருந்த பொது மக்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் அமர்ந்து தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் அம்மா மண்டபம் அமைந்துள்ளது. காவிரிக்கரையில் உள்ள இந்த மண்டபத்தில் வைத்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தவும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி வழங்கவும் தினந்தோறும் பொதுமக்கள் கூட் டம் நிரம்பி வழியும்.

தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மா மண்டபத்திற்கு வருகை தருவர். முக்கிய பிரமுகர்கள் பலரும் அஸ்தியை கரைப்பதற்கு இங்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் அம்மா மண்டபமும் மூடப்பட்டது. மேலும் காவிரிக்கரையில் இறுதி சடங்குகள் நடத்த பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அம்மா மண்டபம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக எந்தவித சடங்குகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று 1-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி அம்மா மண்டபத்தில் இறுதி சடங்குகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புரோகிதர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர்.

அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளான நேற்று குறைந்த அளவிலேயே பொதுமக்கள் அம்மா மண்டபத்திற்கு வந்தனர். ஒருவித அச்சத்துடன் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி சென்றனர். இன்று அதற்கு நேர்மாறாக ஏராளமானோர் வந்திருந்தனர்.

தர்ப்பணம், இறுதிசடங்கு களுக்கு வந்திருந்த பொது மக்களும் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் அமர்ந்து தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வழிபட்டனர். காவிரியில் தர்ப்பணம் அளித்து முன்னோர்களுக்கான நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.

புரோகிதர்களும் முகக்கவசம் அணிந்திருந்ததோடு, சமூக இடைவெளியை கடைபிடித்து, தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களுக்கும் வலியுறுத்தினர். இதன் காரணமாக அம்மா மண்டபத்தில் மீண்டும் சகஜநிலை திரும்பியுள்ளது. வெளியூர்களில் இருந்தும் இன்று ஏராளமானோர் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News