செய்திகள்
சுதீர் முங்கண்டிவார்

உத்தவ் தாக்கரே பெயருக்கு தான் முதல்-மந்திரி: சுதீர் முங்கண்டிவார் குற்றச்சாட்டு

Published On 2019-12-20 02:16 GMT   |   Update On 2019-12-20 02:16 GMT
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பெயருக்கு தான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் முடிவுகளை எடுக்க சோனியாகாந்தி மற்றும் சரத்பவாரிடம் அனுமதி கேட்க வேண்டி உள்ளது என்று பாரதீய ஜனதா முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் குற்றம் சாட்டினார்.
மும்பை :

நாக்பூரில் மகாராஷ்டிரா சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சட்டசபை வளாகத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் பெயரளவில் ஒரு முதல்-மந்திரியை (உத்தவ் தாக்கரே) உருவாக்கி உள்ளனர். அவர் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சோனியாகாந்தி மற்றும் சரத்பவாரின் அனுமதியை பெற வேண்டி இருக்கிறது. அதனால்தான், சபையில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை விட, பொதுக் கூட்டங்களில் பொதுவாக எழுப்பப்படும் தேசிய பிரச்சினைகள் குறித்து அவர் பேசுகிறார்.



காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்ததற்காக உத்தவ் தாக்கரேயை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். முன்பு அவரது முகம் பளபளப்பாக இருந்தது. தற்போது வெளிர் நிறமாகி விட்டது.

அவர் வைத்திருக்கும் கூட்டணியின் விளைவு தான் அதற்கு காரணம். இன்று மக்கள் டம்மி முதல்-மந்திரியை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சோனியாகாந்தி மற்றும் சரத்பவாரின் பிடியில் இருந்து அவர் விலகி வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News