செய்திகள்
ஒகேனக்கல் ஐந்தருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

Published On 2019-08-10 06:04 GMT   |   Update On 2019-08-10 06:04 GMT
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர்:

பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போடும் வகையில் மழை பெய்துள்ளது. இன்னும் 2 தினங்களுக்கு இந்த மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பலத்த மழை காரணமாக இந்த மாநிலங்களில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு 45 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களது கதி என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 238 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 13 அணைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்திலும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பலத்த மழை நீடிப்பதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மாயமாகி விட்டனர். கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் மழையால் கபினி மற்றும் ஹாரங்கி அணைகள் நிரம்பியது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப் பாய்ந்து வருகிறது.

இந்த தண்ணீர் நேற்று மாலை தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பில்லிகுண்டுலுவை வந்தடைந்தது. மாலை 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நள்ளிரவு 75 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

காவிரியில் வரும் நீர்வரத்தை பில்லிகுண்டுலுவில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்த தண்ணீர் சிலமணி நேரங்களில் ஒகேனக்கல் வந்தடைந்தது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெளியே தெரிந்த பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஐவர்பாணி அருவி இருந்த இடம் தெரியாமல் வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கிவிட்டது. காவிரி ஆற்றில் இரு புறங்களையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் கதவு அடைக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஊட்ட மலை, நாடார்கொட்டாய், சத்திரம், இந்திரா நகர் ஆகிய பகுதி மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கரையோர பகுதிகளில் தண்டோரா போட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக சமூக நலக்கூடங்களும் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. ஆற்றில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக இன்று அதிகாலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. நேற்று அணைக்கு 5 ஆயிரத்து 236 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 5 மணிக்கு இது 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து 8 மணி நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயரத் தொடங்கி உள்ளது.



நேற்று அணையின் நீர் மட்டம் 54.50 அடியாக இருந்தது. இன்று காலை மேலும் 3 அடி தண்ணீர் அதிகரித்து 57.16 அடியாக இருந்தது. ஒரே நாளில் 3 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் உள்ள ஹாரங்கி அணை நிரம்பி அதில் இருந்து 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேராக கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு சென்றடைகிறது.

மற்றொரு அணையான ஹேமாவதி அணை இன்று நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணையில் இருந்தும் உபரி நீர் திறந்தால் நேராக கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வரும்.

இதனால் இன்னும் சில நாட்களில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இந்த அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் மேட்டூர் அணைக்கு மேலும் அதிகளவு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 90 அடியை எட்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் 90 அடியை எட்டினாலே காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

தற்போது 1.5 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் இம்மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளதால் ஒரு மாதம் கழித்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் கரையோர பகுதியான பண்ணவாடி, செட்டிப்பட்டி கோட்டையூர் உள்பட பல்வேறு கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் பொதுமக்கள் அணை பக்கம் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News