ஆன்மிகம்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் உள்ள குருபகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றதை காணலாம்.

திட்டை கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2019-10-30 04:26 GMT   |   Update On 2019-10-30 04:26 GMT
குருப்பெயர்ச்சியையொட்டி திட்டை கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 9-ந்தேதி முதல் 4 நாட்கள் பரிகாரஹோமம் நடக்கிறது.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு நேற்று அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெரிசல் இன்றி கோவிலுக்கு செல்லும் வகையில் கட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தி பொது மற்றும் சிறப்பு என 2 வழிகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சியையொட்டி ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் போன்ற ராசியை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி திட்டை கோவிலில் வருகிற 8-ந்தேதி லட்சார்ச்சனையும், 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறுகிறது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவராம்குமார், தக்கார் முரளிதரன், செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், திட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News