வழிபாடு
செப்பறை அழகிய கூத்தர்

செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடக்கம்

Published On 2021-12-11 04:08 GMT   |   Update On 2021-12-11 04:08 GMT
நெல்லை அருகே உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

7-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 8-ம் திருநாளான 18-ந் தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தீபபூஜை நடக்கிறது.

9-ம் திருநாளான 19-ம் தேதி காலை 11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

20-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், காலை 5.30 மணிக்கு கோபூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனை, இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 14-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது. 19-ம் தேதி தாமிர சபையில் இரவு முழுதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை பெரிய சபாபதி சன்னதி முன்பு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெண்பாவை வழிபாடு நடக்கிறது.
Tags:    

Similar News