செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் 3 மாதத்தில் போலீஸ் ஆணையம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published On 2021-09-10 10:47 GMT   |   Update On 2021-09-10 10:47 GMT
இனி வரும் காலங்களில் போலீசாருக்கு 8 மணி நேர வேலை, 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மதுரை:

கரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், தமிழக காவல்துறையில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், காவலர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, போலீசாரின் குறைகளை கேட்கவும் அவற்றை நிவர்த்தி செய்யவும் ஓயவு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவர்கள், உளவியலாளகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், பணியில் உள்ள காவல் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட போலீஸ் ஆணையத்தை 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 



அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை உள்ளது, ஆனால் போலீசார் 24 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் கோபமாக பணிபுரிய அதுவே காரணம். மன உளைச்சலில் காவலர்கள் தற்கொலை செய்கின்றனர். உடல்நலக்குறைவாலும் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, இனி வரும் காலங்களில் போலீசாருக்கு 8 மணி நேர வேலை, 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

காவலர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாயும், காவலர்கள் முழுமையாக ஊனமடைந்தால் 8 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.25 லட்சம், ஊனமடைந்தால் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News