செய்திகள்

கமல்ஹாசன் 19-ந்தேதி மக்களை சந்திக்கிறார் - திருப்பூர்,கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

Published On 2018-09-15 06:54 GMT   |   Update On 2018-09-15 06:56 GMT
கோவை,திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

கோவை:

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

அன்றே நடந்த முதல் அரசியல் மாநாட்டில், அவர் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். வெள்ளை நிறத்தின் மத்தியில் 6 இணைந்த கைகள் இருப்பது போன்று அவரது கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக தனது கட்சிப் பணிகளை நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக செய்து வருகிறார். முக்கிய பிரச்சினைகள் மீது தனது கருத்தையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கட்சியின் உள் கட்டமைப்பை மாற்றி அமைத்த கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தல்கள் நெருங்குவதால் அடுத்தக்கட்டமாக அவர் மக்களை சந்திக்க தயாராகி வருகிறார்.

அதன்படி தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற் கொண்ட சுற்றுப் பயணம் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் தனது மக்கள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் 2 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கோவையில் வருகிற 18, 19-ந் தேதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பயிலரங்கம் அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நடைபெறுகிறது.

 


இதில் 2-வது நாள் (19-ந்தேதி) பயிலரங்கில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். பயிலரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடி கட்சியின் வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி பேச உள்ளார்.

அன்று மதியம் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசுகிறார். இதன்பின்னர் பொள்ளாச்சி செல்லும் அவர் அங்கு மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார்.

பொதுமக்களை சந்தித்து பேசிய பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகால் மண்டபத்தில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு பொள்ளாச்சியில் தங்குகிறார்.

மறுநாள்(20-ந்தேதி) திருப்பூர் மாவட்டத்தில் அவர் மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார். அன்று திருப்பூர் பொன்னிவாடி, தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் மாநகரில் சின்னான்டி பாளையம், வீரபாண்டி பிரிவு, சி.டி.சி. கார்னர், புதிய பஸ் நிலையம், எஸ்.ஏ.பி. தியேட்டர், பாப்பீஸ் ஓட்டல் அருகில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் உரையாடுகிறார்.

கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதமே கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப் பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கமல்ஹாசன் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினர் கமல் ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளனர்.

சுற்றுப் பயணத்தின் போது பொது மக்கள் பிரச்சினை குறித்து கமல்ஹாசனிடம் எடுத்து கூறவும் திட்டமிட்டு உள்ளனர். கொங்கு மண்டலத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் பயணம் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

Tags:    

Similar News