செய்திகள்
விபத்து

அலங்காநல்லூர் அருகே பள்ளி ஆசிரியை விபத்தில் பலி

Published On 2021-09-02 06:34 GMT   |   Update On 2021-09-02 06:34 GMT
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாண்டி (வயது 52). விவசாயி. இவரது மகள் ஆர்த்தி (22).

பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் குரல்மணி (22).

தோழிகளான இவர்கள் இருவரும் அழகர்கோவில் அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த ஒரு மாதமாக ஆசிரியைகளாக பயிற்சி பெற்று வந்தனர்.

நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. பள்ளிகள் தொடங்கிய முதல் நாளான நேற்று காலை இருசக்கர வாகனத்தில் ஆர்த்தியும், குரல்மணியும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மதுரை- நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அருகே கடவூர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த சமயம் ஆசிரியைகள் சென்ற மொபட் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 ஆசிரியைகளுக்கும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆர்த்தி பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயங்களுடன் குரல்மணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய 2 கார்களில் வந்த 8 பேர் காயமடைந்தனர்.

பள்ளிகள் திறந்து முதல் நாளிலேயே ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் இறந்த ஆசிரியை ஆர்த்தி இளங்கலை கல்வியியல் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மகள் பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
Tags:    

Similar News