செய்திகள்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக 9.22 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்- சத்யபிரத சாகு

Published On 2020-11-03 01:52 GMT   |   Update On 2020-11-03 01:52 GMT
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக தமிழகம் முழுவதும் 9.22 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதியில் இருந்து இம்மாதம் நவம்பர் 1-ந் தேதி வரை (நேற்று முன்தினம்) 9 லட்சத்து 48 ஆயிரத்து 521 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

அவற்றில் 4.06 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும், 5.42 லட்சம் விண்ணப்பங்கள் நேரடியாகவும் பெறப்பட்டன. பெயர் சேர்ப்புக்காக மட்டும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 808 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இறந்தவர் பெயர் நீக்கம் மற்றும் வாக்காளர் ஒருவரின் பெயர் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் அவற்றையும் நீக்குவதற்காக 4.88 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. திருத்தங்களுக்காக 1.82 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 22 ஆயிரத்து 166 ஆகும். அவர்களின் ஆண்கள் 4.52 லட்சம், பெண்கள் 4.70 லட்சமாகும். 22 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 421 ஆகவும், சென்னை மாவட்டத்தில் 78 ஆயிரத்து 618 ஆகவும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 329 ஆகவும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News