செய்திகள்
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் வழிபடும் பெண்கள்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தடை நீங்கியது - திருப்பூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்

Published On 2021-10-15 10:06 GMT   |   Update On 2021-10-15 10:06 GMT
குறிப்பாக ஆடிமாதம் அம்மன் கோவில்களில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் பெண் பக்தர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வந்தது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி  தொடர் பண்டிகை காலங்கள் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதையடுத்து கோவிலுக்குள் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செயப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னர் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் ஈஸ்வரன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ஊத்துக்குளி சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வழிபட பக்தர்கள் அதிகம் பேர் வந்தனர். சுற்றுலா தலங்கள் நிறைந்த உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் குடும்பத்துடன் வருகை வந்து வழிபாடு நடத்தினர். 

இதனால் பல மாதங்களாக களையிழந்து காணப்பட்ட அமணலிங்கேஸ்வரர் கோவில் இன்று முதல் களை கட்டி காணப்படுகிறது. தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மட்டுமின்றி பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் மலைவாழ் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவில்களுக்கு சென்று கொரோனா தடுப்பு விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கோவில் நிர்வாகங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை எடுத்துக்கூறினர். 

மேலும் இன்று விஜயதசமி நாள் என்பதால் பல கோவில்களில் பக்தர்கள் கூட்டம்  அதிகம் காணப்பட்டது. வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருப்பூர் - காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். 

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மிகவும் கவலையடைந்தனர்.  
குறிப்பாக ஆடிமாதம் அம்மன் கோவில்களில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் பெண் பக்தர்கள்  மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். 

தற்போது புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபட தடை விதிக்கப்பட்டதால்  பெருமாள் கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டதால் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நாளை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.  
Tags:    

Similar News