செய்திகள்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய காட்சி.

சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்- வெங்கையா நாயுடு பேச்சு

Published On 2020-02-26 13:31 GMT   |   Update On 2020-02-26 13:31 GMT
உணர்ச்சிவசப்பட்டு, சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும் என்று பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

பல்கலைக்கழகங்கள் சமூகத்தில் இருந்து தொடர்பில்லாமல் தனிமைப்பட்டு இருக்கும் அலங்கார டவராக இருக்கக்கூடாது. அறிவை உருவாக்கி, இணைத்து அடுத்த தலைமுறைக்கு பகிர்வது அவசியம். பல்கலைக்கழகங்கள் அறிவு களஞ்சியங்களாக புவியியல் அமைப்பை தாண்டி இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன் இணைந்திருக்க வேண்டும்.

கல்வியானது சமூகத்தில் வேர் போல் இருந்து பூக்களின் நறுமணத்தை போன்று அறிவை உலகெங்கும் பரவ வேண்டும். அது மக்களுக்கு சக்தியையும் தர வேண்டும். நேரத்தில் பாதியை வகுப்பறையிலும், மீதி நேரத்தில் சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராம மக்கள் பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். விவசாயத்தை அறியுங்கள். நம்மூர் முக்கிய பணி அது. உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப கல்வி கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். பணிவாய்ப்புகளை உருவாக்கும் கல்வி அவசியம்.

பல்கலைக்கழகங்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கல்வி புரட்சியை முன் நிறுத்த வேண்டும். உல கெங்கும் உள்ள புதிய வாய்ப்புகள் மற்றும் புது முயற்சிகளுக்கான கதவையும், ஜன்னலையும் பல்கலைக்கழகங்கள் திறக்க வேண்டும். உள்ளூர் தேவை அறிதலும் அவசியம்.

பட்டம் பெறுதல் ஒரு படிக்கட்டுதான். தற்போதைய உலகத்தில் மாற்றம் படுவேகமாக நிகழ்கிறது. பணிபுரிதல், வெற்றியின் அளவீடு, இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை புதிய வழியில் செல்கிறது. தற்போதைய சூழலில் மாற்றத்துக்கு ஏற்ப சரி செய்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகளையும் அதில் இணைத்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடையும் வகையில் உங்கள் பணியை அமைத்து கொள்வது அவசியம்.

கற்றல் தொடர் பணி. தொடர்ந்து கற்று உலகநாடுகளுக்கு சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுங்கள். ஆனால், மீண்டும் திரும்பி வந்து தாய் நாட்டுக்கு சேவை செய்யுங்கள்,

கல்வியானது புனித மானது. பணிக்கானது மட்டுமல்ல, அறிவை உருவாக்குவதே முதன்மையானது.

ஆசிரியர்கள் விரிவாக எடுத்து கூறி எல்லைகளை நிர்ணயித்து செய்து முடிப்பவரல்ல. குழந்தைகளுக்கு கல்வியில் உதவி செய்து வழிகாட்டுவதே முக்கிய பணி. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ஆற்றுப் படுத்துவராகவும், நண்பராகவும் முன்மாதிரியாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக உணர்வுகளை கையாளுதல் மிக முக்கியம். அதுவே நல்ல மனிதராக இருப்பதற்கு அவசியம். பணமீட்டும் அறிவையும் கற்றல் அவசியம். நன்னெறி கல்வியின் தேவையும் அதிகரித்துள்ளது.

யுனெஸ்கோ 4 வழிகளை அறிவுறுத்தி உள்ளது. கற்றலை அறிதல், கற்றலை செயல்படுத்துதல், கற்றலை கொண்டு வாழ்தல் ஆகியவற்றுடன் கற்றலை கொண்டு சமூகத்திலுள்ள அனைத்து மக்களுடன் இணைந்து வாழ்தல் மிக முக்கியமானது. இதற்கு பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் வாழ்வின் தரம் உயரும்.

தாய்மொழி கல்வி அவசியம், கூடுதல் மொழிகளை கற்றறிவதில் தவறில்லை. இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். நாராயணசாமி புகழுக்கு மக்கள் மொழி அறிந்தது தான். இந்தியும் அவருக்கு தெரியும். எவ்வளவு மொழி கற்றாலும் முதலில் தாய்மொழிதான்.

தண்ணீர் பற்றாக்குறை உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. அதை பாதுகாக்கவும், மறு சுழற்சியில் பயன்படுத்துவது அவசியம்.

இளையோரிடம் நேர்மறை மனப்பான்மையே தற்போது தேவை. எதிர்மறை எண்ணமல்ல.

நிர்பயா வி‌ஷயத்தில் சட்டம் இயற்றுவது போதாது. அரசியல் வலிமையும் தேவை. அதுவும் போதாது. இறுதியில் அதை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். உலகத்திலே இந்தியாதான் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது.

இன்றைக்கு என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். சட்டம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது. ஆனால், விதிகளை மக்கள்தான் பின்பற்ற வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு, சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும்.

அமைதி வெளியில் இல்லை. எல்லோருக்கும் உள்ளும் இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை இருக்கிறது. போராட்டம் நடத்தலாம், ஆனால், ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானிய குழுவானது உயர் கல்வி நிறுவனங்களில் மனித மதிப்பு மற்றும் தொழில் தர்மம் உயர்நிலையில் இருக்க 5 முறைகளை வடி வமைத்துள்ளது.

அதன்படி கல்வி கற்றல் முழு வளர்ச்சி மேம்பாடாக இருக்க வேண்டும், தவறு செய்யாத ஆளுகை திறன், சிறந்த பல்கலைக்கழக நிர்வாக திறன், நல்லது செய்தால் பாராட்டும் திட்டம், பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவன சூழல் சரியானதை செய்தால் மகிழ்ச்சி தருவதாகவும், தவறானதை செய்வோர் ஊக்கம் அடையாமல் இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையேயே இன்னும் கடைபிடிப்பது ஏன்? கதர், காதி, பட்டு என இந்திய தொடர்பானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Tags:    

Similar News