செய்திகள்
மீட்கப்பட்ட யானை

தருமபுரி: கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Published On 2020-11-19 15:18 GMT   |   Update On 2020-11-19 15:18 GMT
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை 50 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 50 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

உடனடியாக, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் உடன் இணைந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றின் முதல் 20 அடி மிகவும் அகலமாக இருந்தது. அதன்பின் உள்ள 30 அடி குறுகிய அகலம் கொண்டதாக இருந்ததால் யானையை மீட்க சிரமப்பட்டனர். யானை மீட்கப்படும் தகவல் அறிந்து அருகில் உள்ள நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். அதில் சில இளைஞர்கள் மீட்புப்படையினருக்கு உதவி செய்தனர்.

கிணற்றில் இறங்கி யானை கட்டி கிரேன் மூலம் தூக்குவது சவாலானதாக இருந்தது. யானை உயிருடனும், துடிப்புடனும் இருந்ததால் மயக்க ஊசி போட்டு மீட்க முடிவு செய்தனர். முதல் மயக்க ஊசியில் யானை மயக்கம் அடையவில்லை. பின்னர் 2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் யானை மயக்கம் அடைந்தது. அதன்பின் யானையின் கழுத்து மற்றம் கால்களில் கயிறு கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கினர். யானை 30 அடி குறுகிய இடத்தை கடந்து மேலே வரும்போது கயிறு நழுகி பக்கவாட்டில் விழுந்தது.

அதன்பின் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறை இறுக்கமாக கட்டி வெற்றிகரமாக மேலே தூக்கினர். 15 மணி நேர போராட்டத்திற்குப்பின் யானை உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News