ஆன்மிகம்
திருப்பதி கோவில் புஷ்கரணி

திருப்பதி கோவில் புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

Published On 2021-02-01 05:55 GMT   |   Update On 2021-02-01 05:55 GMT
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் பக்தர்கள் புனிதநீராட அனுமதிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
திருமலை :

திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் 66 கோடி புண்ணியத் தீர்த்தம் உள்ளது. அதில் முக்கியமானவை 1008, அவற்றுள் சிறந்தவை 216, இவைகளில் சலக புண்ணியங்களையும் தரக்கூடியது 108. முக்தி தருபவை 26. எல்லா விதத்திலும் மேன்மைகளையும், சிறப்பையும், மகிமையையும் கொண்ட அதி விசேஷமான தீர்த்தங்கள் ஏழு. அந்த ஏழு தீர்த்தத்தில் மிக முக்கியமானது ஸ்ரீவாரி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளம்.

ஸ்ரீவாரி புஷ்கரணியில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா பரவலால் பக்தர்கள் புனித நீராடவும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்கள் புனிதநீராட அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீவாரி புஷ்கரணிக்குச் செல்லும் நுழைவு வாயிலின் கதவு மூடப்பட்டது.

இந்தநிலையில் மத்திய, மாநில உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தீர்த்தம் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள், யாத்ரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் பிப்ரவரி மாதம், முதல் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டியை சந்தித்து, ஆலோசனை நடத்தி, விரைவில் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட உரிய தேதியை அறிவிப்பார், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News