செய்திகள்
கோப்புபடம்.

ஆடுகளுக்கு தடுப்பூசி-கால்நடைத்துறை அறிவுறுத்தல்

Published On 2021-11-23 07:46 GMT   |   Update On 2021-11-23 07:46 GMT
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும்.
உடுமலை:

உடுமலை பகுதியில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இறைச்சி, பால், தோல் ,ரோமம் மற்றும் உரத்தேவைக்காகவே ஆடு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

வெள்ளாடுகளை அடைப்பான் துள்ளுமாரி, கோமாரி ,தொண்டை அடைப்பான் நோய் போன்ற பல்வேறு நச்சுயிரி நோய்கள் தாக்கலாம். 

குறிப்பாக மழைக்காலத்தில் ஆட்டின் 6 மாத வயதில் அடைப்பான் நோய் தாக்க வாய்ப்புள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும். 

அதேபோல் செம்மறி ஆடுகளுக்கு மழைக்காலங்களில் நீலநாக்கு நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை துறை அறிவுறுத்தியுள்ளது.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும்.பருவமழை போன்ற பேரிடர் காலத்தில் கால்நடைகள் நோய் மற்றும் விபத்தில் இறந்தால் உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது,  

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால் இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். அதேபோல் பேரிடர் காலங்களில் கால்நடைகள் நோய் மற்றும் விபத்தில் இறந்தால் உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். 

இருப்பினும் மழைக்கால நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்.

மழைக்காலங்களில் ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சென்று உரிய டாக்டரிடம் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற வேண்டும். தகுந்த தடுப்பூசி போடுவது அவசியம் என்றனர்.
Tags:    

Similar News