செய்திகள்
சிறுத்தை

முக்கடல் அணை பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Published On 2021-10-09 08:28 GMT   |   Update On 2021-10-09 08:28 GMT
முக்கடல் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்ததையடுத்து அங்கு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமிராவில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது பதிவாகி உள்ளது.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து நேற்று மாலை முதல் மறுகால் பாய்ந்து வருகிறது. அணையின் கீழ் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் அறிவியல் பூங்காக்களும் உள்ளது.

இதை மாநகராட்சி அதிகாரிகள் பராமரித்து வருகிறார்கள். இந்த பூங்காவில் திருமண போட்டோ ஷூட்டிங், சின்னத்திரை, பெரியதிரை படப்பிடிப்புகள் நடத்தும் வசதிகளும் உள்ளது. கடந்த சில நாட்களாக பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

முக்கடல் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்ததையடுத்து அங்கு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமிராவில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது பதிவாகி உள்ளது.

இதைப்பார்த்த ஊழியர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சி.சி. டி.வி. கேமிராவின் காட்சியை ஆய்வு செய்தபோது சிறுத்தைப்புலி ஒன்று இரவு நேரத்தில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த குட்டி சிறுத்தைப்புலி ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றி திரிந்த சிறுத்தைப்புலியின் குட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும், வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிறுத்தைப்புலி நடமாட்டம் மீண்டும் இருப்பதால் முக்கடல் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். அங்கு தினமும் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்தோடு வந்து செல்லும் நிலையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News