உள்ளூர் செய்திகள்
சிறப்பு பஸ்

பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு - அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

Published On 2021-12-20 06:33 GMT   |   Update On 2021-12-20 06:33 GMT
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாகவும், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாகவும் இன்று மாலை நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் விடுவது தொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆலோசனையில், போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, 2022-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் நடைபெறுவதால் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாகவும், சிறப்பு டிக்கெட் மையங்கள் ஏற்படுத்துவது குறித்தும், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாகவும் இன்று மாலை நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.



குறிப்பாக, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதே அளவில் பஸ்கள் இயக்கப்படுவதோடு, சென்னையை பொறுத்த வரை மாதவரம், கே.கே.நகர் பஸ் நிலையம், கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News