செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி தீவிரம்

Published On 2020-10-17 14:42 GMT   |   Update On 2020-10-17 14:42 GMT
திருச்சி விமான நிலையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்களுடன் புதிய முனையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட உள்ளன. இந்த விமான நிலையமானது 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 48 பரிசோதனை கவுண்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

மேலும் இந்த விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் திருச்சி விமான நிலையமானது மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News