வழிபாடு
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

Published On 2022-02-08 08:01 GMT   |   Update On 2022-02-08 08:01 GMT
காஞ்சீபுரம் காமாட்சி அம்மனுக்கு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சிவவாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச அய்யர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோவில் செயல் அலுவலர் நதியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர் மற்றும் கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருகிற 12-ந்தேதி தங்கப் பல்லக்கும், 14-ந் தேதி தேரோட்டமும், 16-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரியும் 19-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News