உள்ளூர் செய்திகள்
கலெக்டர் பாலசுப்பிரமணியம் - சிவக்குமார் எம்எல்ஏ

கடலூர் கலெக்டர் - மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-25 03:00 GMT   |   Update On 2022-01-25 03:00 GMT
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பாலசுப்பிர மணியம் (வயது 51). இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என வந்தது. இருப்பினும் கலெக்டருக்கு தொடர்ந்து காய்ச்சல், உடல் வலி இருந்ததால் நேற்று காலை மீண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதன் பரிசோதனை முடிவு மாலையில் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சிவக்குமார். பா.ம.க.வை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர், காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதையடுத்து மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதன் முடிவு நேற்று வெளியானதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார், திருவாமாத்தூர் பொன்அண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே சிவக்குமார் எம்.எல்.ஏ., தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், தன்னுடன் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News