சிறப்புக் கட்டுரைகள்
அழகுக்கு அருமருந்தாகும் பப்பாளி

இயற்கைத் தரும் இனிய வாழ்வு - அழகுக்கு அருமருந்தாகும் பப்பாளி

Published On 2021-12-03 10:56 GMT   |   Update On 2021-12-03 10:56 GMT
இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் அழகுக்கு அருமருந்தாகும் பப்பாளி குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பப்பாளிப் பழத்தை மட்டுமே ஒருவேளை இருவேளை உணவாக எடுப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டால் மலச் சிக்கல் நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம். 

எவருக்கு மலச்சிக்கல் வருடக் கணக்காக நீடிக்கிறதோ அவர்களுக்கு அதன் தொடர் வியாதியாக குதம் வெளித் தள்ளுதல், மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், குதப் பகுதி வீக்கமுற்று நீர் கோர்த்தல் போன்ற பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதில் இருந்து தப்ப முடியாது. அது மலச்சிக்கலாக இருந்தாலும் சரி, அதன் தொடர்பான வேறு தொல்லைகள் ஆனாலும் சரி பப்பாளியை மட்டுமே உண்டு சரி செய்து கொள்ள முடியும். பப்பாளியில் நீர்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்து, தாதுச் சத்துப் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் இருப்பதால்  அதனை ஓர் முழுமையான உணவாக எடுத்துக் கொள்ளலாம். பப்பாளியை மட்டுமே எடுத்துக் கொள்கிற போது உடலியக்கத்தில் எவ்விதமான பலவீனமும் ஏற்படாது.
 
உடலில் தேங்கியுள்ள ஆபத்தான ரசாயனக் கூறுகளை நீக்கத் துணை புரிவதோடு ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்தவும் செய்கிறது. 

மலச்சிக்கல், மூலம் தொடர்பான வியாதிகளை நீக்கத் துணை செய்வதோடு உடலின் ஒட்டுமொத்தமான நலனை மேம்படுத்துவதற்கும் பப்பாளி ஓர் முழுமையான உணவாக இருக்கிறது. 

காசநோய் போன்ற ஆண்டுக்கணக்கான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருகிறவர்கள் மருந்துகளின் எதிர் விளைவைத் தணிக்கவும், உடலின் கட்டமைப்பை மறுசீரமைத்துக் கொள்ளவும் பப்பாளி சிறந்த உணவாக இருப்பதோடு செலவு வைக்காத பழமாகவும் இருக்கிறது. இன்றும் பப்பாளியின் அதிகபட்ச விலை நாற்பது ரூபாய் தான். குறைந்த அளவுள்ள பழத்தின் எடையே முக்கால் கிலோவாவது இருக்கும். எனவே ஒரு பழத்தை வாங்கினால் அறுத்து நான்கைந்து பேராக உண்டு அதனை முழுவதுமாக முடித்து விடவேண்டும். அறுத்து நான்கைந்து மணி நேரத்திற்கு மேல் ஆனால் அதில் பூஞ்சாணம் பற்றத் தொடங்கி விடும். பழத்தை அறுத்து வைத்திருந்து சாப்பிடுவதானால் உப்பும் எலுமிச்சம் பழச்சாறும் கலந்த கலவையை பழத்தின் மிகுந்த பாகத்தில் பூசி வைத்து விட்டால் அதில் நுண்ணியிரிகள், கொசுக்கள் மொய்க்காது, பூஞ்சாணம் பற்றாது. 

பப்பாளியின் மேற்தோலை மேலுக்குப் பூசிக் குளிக்கலாம். பப்பாளியின் சதையானாலும், வெறும் தோலானாலும் தூய்மையான பகுதியை எடுத்து அரைத்து பத்திருபது நிமிடங்கள் ஊற விட்டு நிதானமாகத் தேய்த்துக் குளித்தால் தோல் பாகம் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் புத்துணர்ச்சித் தோன்றுவதை நன்றாக உணர முடியும். குறிப்பாக நல்ல வெயில் காலங்களில் காலை வெயில் துவங்கும் நேரத்தில் பப்பாளி சதை அல்லது தோல் ஏதேனும் ஒன்றை மிக்சியில் இட்டு சூடேறாத வண்ணம் அரைத்து உடல் முழுதும் சீராகத் தடவி விட்டால் அதன் ஜெல் போன்ற கூறு நமது தோலின் வியர்வைத் துளைகள் வழியாக சத்துக்கள் ஊடுறுவி உள்ளே செல்வதை உணர முடியும். உள்ளீர்க்கப்பட்ட சத்துக்கள் உடல் முழுதும் பரவுவதையும், பப்பாளிச் சுவை நாவில் படருவதையும் உணர முடியும். இந்த உணர்வு தணிந்து மேலே தடவிய கூழ் நன்றாக உலர்ந்த பிறகு மிதமான வெந்நீரில் அல்லது புறச் சூழலில் உள்ள தட்பவெப்ப நிலையில் நீரில் குளிக்க வேண்டும். கூழின் பசைப் பிசுபிசுப்பு தோலில் ஒட்டியிருப்பது போன்ற உணர்வு இருக்கலாம். அதற்காக சோப்புப் போட்டுத் தேய்ப்பதோ, சீயக்காய்ப் பொடி போட்டுத் தேய்ப்பதோ கூடாது. 

பப்பாளிக் கூழில் குளிப்பதை மூன்று நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து குளித்து வரலாம். குறிப்பாகத் தோலில் வறட்சி, உள் வெப்பம் மிகைப்பட்டு தோல் சுருங்கிய நிலையில் இருப்பவர்கள் மேற்சொன்னது போல குளித்து வந்தால் தோல் பளபளப்பாவதை நன்றாக உணர முடியும். தற்கால உணவு முறையில் பிரைடுரைஸ், தந்தூரி, ரொட்டி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு குடல் வறட்சி, மலச்சிக்கல், தோல் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. அந்நிலைக்கு ஆளானவர்களுக்கு பப்பாளி எளிய கை மருந்தாக இருப்பதோடு உடல்நல மேம்பாட்டிற்கு ஏற்ற அரு மருந்தாக இருக்கும்.
 
தற்காலத்தில் சகலருக்கும் தலைமுடிப் பராமரிப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளுக்கே புரதச் சத்திலும், நுண் சத்திலும் பற்றாக்குறை நிலவுகிற பொழுது தலைமுடிக்கு எங்கே அவை கிடைக்கப் போகிறது. அதனால் தான் தலைமுடியின் அடர்த்திக் குறைபாடும், தலைமுடியின் கம்பி போன்ற உறுதித் தன்மை குறைந்து போதலும் பரவலாகக் காணப்படுகிறது. 

நகரப் பகுதிகளில் சொல்லவே வேண்டாம். வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, மாசு போன்ற புறச் சூழலில் மூச்சுக் காற்றுடன் தலைமுடியையும் வெகுவாகப் பாதித்து விடுகிறது. பகலெல்லாம் வெளியில் சுற்றுவதால் தலைமுடியில் புறச்சூழல் புகைப் பிசுபிசுப்பு ஏறி விட்ட உணர்வு தோன்றுகிறது. அதனால் ஒவ்வொருக் குளியலின் போதும் சாம்புத் தேய்த்துக் குளிப்பது பலருக்கும் அன்றாடப் பழக்கமாகி விட்டது.
   
தொலைக்காட்சி, ஊடகங்களில் காட்டப்படும் சாம்பூ விளம்பரங்களின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறோம் அதன் ஆபத்துகளை உணராமலே. முடியின் பிசுபிசுப்பை நீக்க ஒரு ரசாயனம், நுரைப் பொங்கச் செய்ய ஒரு டிடர்ஜென்ட், கூந்தலின் பளபளப்புக்கென்று ஒரு எண்ணைத் தன்மை உடைய ரசாயனம் என கிட்டத்தட்ட 23 கூறுகள் பத்துமில்லி ஷாம்பூவில் சேர்மானம் ஆகியுள்ளது. இவற்றில் பாரபென், சோடியம் லாரல் சல்பேட், பாலியெத்லின் கிளைக்கோல், சோடியம், பொட்டாசியம், சோர்பெட் போன்ற 13 வகையான ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை.

ஆனால் இவற்றைப் பற்றிய எவ்விதமான எச்சரிக்கை உணர்வும் இன்றி நேற்றுப் பிறந்த குழந்தை முதல் சுயமாகக் குளிக்க இயலாத முதியவர்கள் வரை சாம்புவை நுரைக்க நுரைக்கத் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறோம். உடலின் மிகப் பெரிய பாகத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய தோல் பகுதியானது மிகவும் நுட்பமான உணர்வு மிகுந்தது. மேலே சொன்னது போல புறத்தில் உள்ளதை உள்ளுக்குக் கடத்திச் செல்லக் கூடியது. இன்னும் குறிப்பாகத் தலையில் வைத்துத் தேய்க்கும் சாம்பின் ரசாயனக் கூறுகள் உடனடியாக மூளையின் மென்னரம்புகளில் வினைபுரியக் கூடியது. அவ்வாறு வினைபுரிவதால் உள் சுரப்பிகளும் தாறுமாறாகத் தூண்டிவிட வாய்ப்புகள் உண்டு. 

வழக்கத்திற்கு மாறாகத் தூண்டப்படும் சுரப்பிகளால் புற்றுநோய் உட்பட ஆபத்தான நோய்கள் ஏற்படும் சாத்தியம் உண்டு. இதைத்தான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று வடிவேலு கூறுகிறார்.

அப்படியானால் தலைக்கு எதைத் தேய்த்துக் குளிப்பது என்ற கேள்வி எழலாம். நாம் பாரம்பரியமாகத் தேய்த்துக் குளிக்கும் சீயக்காய்த் தூளே மிகவும் சிறந்தது. என்றாலும் முடியை மிக எளிதாகச் சுத்தப்படுத்தவும், அதற்கு வலுவூட்டவும் முன் சொன்ன மேலுக்குத் தேய்த்துக் குளிக்கும் பப்பாளிப் பழக்கூழையே தலைக்கும் தேய்த்துக் குளிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் தலைக்கும் மேலுக்கும் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தோலில் தேய்ப்பது எதுவானாலும் அது உள்ளீர்க்கப்பட்டு மேலே தலையை நோக்கி ஏறும். எனவே அதுவே போதுமானது. அல்லது தலைக்குத் தேய்க்கும் போது அது உடல் முழுக்கப் பரவும். எனவே எப்பொழுது தேய்த்தாலும் தலை அல்லது மேலுக்குத் தேய்ப்பதே சரியானது.

பப்பாளிக் கூழினைத் தலைக்குத் தேய்த்தாலும் உடலில் முழுதாகப் பரவும் வரை அதற்குப் போதிய நேரம் வழங்க வேண்டும். பழக்கூழ் உலர்ந்த பிறகு நீர்விட்டு நிதானமாகத் தேய்த்தால் சிறியளவில் நுரை எழும். அதுவே போதுமானது. தோலை அரிக்கும் டிடர்ஜென்ட் சேர்த்தால் தான் பொங்கிப் பொங்கி நுரையெழும். இந்த ஆபத்தை உணராமல் நுரைபொங்கினால் எல்லாம் சுத்தப்பட்டு விட்டதாக நிறைவடைந்து விடுகிறோம். தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற்குரிய வழியைத் தேட வேண்டும். 

பெருங்குடலின் வறட்சியைப் போக்க உள்ளுக்குள் பப்பாளி சாப்பிடுவதோடு தற்காலிக நிவாரணமாக தலைக்குப் பப்பாளிக் கூழினைத் தேய்த்து உலர விட்டு தலையைக் கசக்கி ஆற விட்டால் தலையின் தோல் பாகம் வறட்சி நீங்கி தலைமுடியும் பளபளப்பாக இருக்கும்.தலையில் பொடுகு இல்லாதவர்களும், முடி சன்னமானவர்களும், தலைமுடியின் நுனிப் பகுதியில் பிளந்த நிலை ஏற்பட்டவர்களும் தொடர்ந்து பப்பாளிக் கூழினைத்தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். தோலுக்குப் பளபளப்பேற்றும் அலங்காரப் பொருளாகவும் நாம் பப்பாளிக் கூழினை பயன்படுத்தலாம். 

தற்காலத்தில் ரத்தச் சிவப்பணு எண்ணிக்கைக் குறைந்து உடல் சோர்வடைவது அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு பப்பாளிப் பழத்தைத் தொடர்ந்து எடுத்து வருவதே ஆகும். குறிப்பாக பூப்பெய்திய மாதம் தொடங்கி உதிரப் போக்கு நிரந்தரமாக நின்று போகும் நாள் வரைக்கும் பெண்களுக்கு சீராக நடைபெறுவது குறைந்து கொண்டே வருகிறது. இந்த விசயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முதன்மையான காரணம் உதிரத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைவே ஆகும்.

இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு கீற்று பப்பாளி எடுத்து வர வேண்டும். மாதாந்திரப் போக்கு நடைபெறும் நேரத்தில் எடுத்தால் அதிகமாகப் போகும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. உண்மையில் அதிகமாகப் போவதில்லை. பப்பாளி எடுக்கும் போது உதிரத்தின் அளவு உயர்வதால்  வழக்கத்தை விடச் சற்றுக் கூடுதலாக இருக்கலாம். ஆனால் இலகுவாகப் போவதால் இடுப்புவலி, கெண்டைக் கால்வலி ஏற்படாது. உள்ளிருந்து வெளியே போதல் எதையும் நாம் ஆபத்தாகக் கருதக் கூடாது. ஆனால் வெளியேற்றத்தின் போது எந்தத் தொல்லையும் ஏற்படாத வரை உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும்.   

கருவுற்றப் பெண்கள் பப்பாளி எடுத்துக்கொண்டால் கருக் கலைந்து விடும் என்பது பொதுவான நம்பிக்கை. பப்பாளியை முக்கால் காயாக அதையும் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் செரிமானம் நடக்கும் போது அதீத வெப்பம் ஏற்படும் வயிற்றில் ஏற்படும் இந்த வெப்பம் வயிற்றிற்கு அருகில் உள்ள பகுதியான கர்ப்பப் பையையும் தாக்கும். இந்தத் தாக்குதலால் பிஞ்சு நிலையில் உள்ள கரு குலைந்து நீர்த்துப் போகும். 
  
துவக்கத்தில் சொன்னது போல பப்பாளியைக் காயாக அதிக அளவில் எடுத்துக் கொண்டால் கருவுற்ற பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பிரச்சினை தான். இந்த முறையைத் தவிர்த்து மற்றபடி பழமாக எடுப்பதில் தவறில்லை. எந்த பாதிப்பும் ஏற்படாது. மீறி அச்சம் இருக்குமானால் கருவுற்ற பெண்கள் முதல் ஓரிரு மாதங்களுக்கு பப்பாளிப் பழத்தை உண்பதைத் தவிர்த்து விட்டு மூன்றாம் நான்காம் மாதங்களில் சுமார் ஐம்பது கிராம் அளவுள்ள கீற்றினை எடுத்துக் கொள்வது ஆபத்து இல்லை.

சிலருக்கு பப்பாளி எடுக்கத் துவங்கும்போது வயிற்று வலி ஏற்படலாம். அப்படி வலியை எதிர் கொண்டவர்கள் பப்பாளியை சாறாகவோ அல்லது தேங்காய்ப் பால் கலந்த பப்பாளி மில்க் சேக்காகவோ எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக விரதம் இருக்கத் தொடங்கும் போது தேங்காய்ப் பால் கலந்த பப்பாளி மில்க் சேக் நன்றாகப் பசி தாங்கும். எனவே உண்பதற்குரிய வேட்கைத் தணிக்கப்படும். 

பப்பாளியானது எளிய விலையில் கிடைக்கும் ஆடம்பரமான பழவுணவு என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் அதனை அடிக்கடி எடுத்துக் கொள்ள தவற மாட்டோம். அடுத்த இதழில் சப்போட்டா குறித்துப் பார்ப்போம். 
Tags:    

Similar News