தமிழ்நாடு
சிறையில் அடைப்பு

லஞ்ச புகாரில் கைதான ஓசூர் பெண் அதிகாரி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைப்பு

Published On 2021-12-01 07:47 GMT   |   Update On 2021-12-01 07:47 GMT
லஞ்ச புகாரில் கைதான ஓசூர் பெண் அதிகாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

ஓசூர்:

வேலூர் தொரப்பாடியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தொழில்நுட்ப கல்வி கோட்ட பொறியாளராக ஷோபனா (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் மீது அரசு கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டிட அனுமதி மற்றும் ஆய்வு செய்வது போன்ற பணிகளில் ஒப்பந்தத்தாரர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காண்டிராக்டர்களிடம் இவர் லஞ்ச பணம் கேட்டதாக மீண்டும் புகார்கள் வந்ததால் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ( வேலூர் பொறுப்பு) கிருஷ்ணராஜன் தலைமையில் வேலூர் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நவம்பர் 2-ந் தேதி இரவு வேலூர் அரியலூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அதிகாரி ஷோபனாவின் காரை சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேலூரில் அவர் தங்கியிருந்த குடியிருப்பிலும், தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த 2 இடங்களிலும் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 -ம், 35 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் , மற்றும் பினாமி பெயர்களில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வங்கி லாக்கர் சாவி, 11 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது பெண் அதிகாரி ஷோபனாவை போலீசார் கைது செய்யவில்லை. மேலும் உயர் அதிகாரிகளும் ’சஸ்பெண்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வில் ஷோபனா கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு பணியில் சேராமல் விடுப்பில் இருந்து வந்தார். லஞ்ச புகாரில் சிக்கி கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்த பிறகும் ஷோபனாவுக்கு பதவி உயர்வு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண் அதிகாரி ஷோபனா மீதான வழக்கு வேலூரில் இருந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.மேலும் ஓசூரில் உள்ள ஷோபனாவின் 

வீட்டுக்கு நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டை விட்டு வெளயே வரவில்லை. மெயின் கேட்டும் பூட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

இதைதொடர்ந்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ஷோபனாவிடம் சுமார் 2 மணிநேரம் விசாரணை செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக வேலூருக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பான ஷோபனாவை கைது செய்தனர். தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று கொரோனை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News