செய்திகள்

கடந்த வருடம் எம்விபி அவார்டு- இந்த சீசனில் ஏமாற்றத்துடன் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்

Published On 2018-05-18 12:50 GMT   |   Update On 2018-05-18 12:50 GMT
ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய வீரர் விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ், இந்த சீசனில் ஏமாற்றத்துடன் சொந்த நாடு திரும்புகிறார். #IPL2018
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் கடந்த சீசனில் இருந்து ஐபிஎல் தொடரில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த இரண்டு சீசனில் விளையாடவில்லை. அந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் பங்கேற்றன.

கடந்த வருடம் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட் பென் ஸ்டோக்ஸை 14.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. அறிமுக சீசனில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 போட்டியில் விளையாடி 1 சதம், ஒரு அரைசதத்துடன் 316 ரன்கள் அடித்தார். அத்துடன் 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என பென் ஸ்டோக்ஸை திரும்ப அழைத்தது. இதனால் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸால் பங்கேற்க இயலாமல் போனது. புனே அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அறிமுக தொடரிலேயே மிகவும் ஆதிக்கம் செலுத்திய வீரர் (Most Valuable Player) என் அவார்டை பெற்றார்.

இந்த வருடம் புனே, குஜராத் அணிக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம்பிடித்தன. ராஜஸ்தான் ராயல்ஸ் 12.5 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுத்தது. ஐபில் தொடருக்கு முன், ஆஸ்திரேலியா தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்தார். இதனால் இந்த சீசனில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.



இந்த சீசனில் 13 போட்டியில் விளையாடி 196 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகப்பட்ச ஸ்கோர் 45 ஆகும். அத்துடன் 8 விக்கெட்டுக்கள் மட்டுமே கைப்பற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு இவரால் பெரிய அளவில் உதவி செய்ய முடியாமல் போனது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோத இருக்கிறது. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால், பென் ஸ்டோக்ஸ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய வீரர் என்ற விருதுடன் சென்ற பென் ஸ்டோக்ஸ், இந்த சீசனில் ஏமாற்றத்துடன் செல்கிறார்.
Tags:    

Similar News