செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை

Published On 2020-10-23 03:11 GMT   |   Update On 2020-10-23 03:11 GMT
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.
மாஸ்கோ:

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது. ரஷிய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷியா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜி) ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.

சோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவன ஆய்வகங்களுக்கு டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனை நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும்.

கிளினிக்கல் பரிசோதனையின் 3-வது கட்டத்திற்குச் செல்வதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டிசிஜிஐ கூறியதாக ரஷிய செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ-யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கூறியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News