செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மதுரையில் 287 பேர் டிஸ்சார்ஜ் : புதிதாக 95 பேருக்கு நோய் தொற்று

Published On 2020-09-15 01:00 GMT   |   Update On 2020-09-15 01:00 GMT
மதுரையில் புதிதாக நேற்று 95 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் புதிதாக நேற்று 95 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 14 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிறது. அந்த வகையில் நேற்றும் மதுரையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 70 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் முன்கள பணியாளர்கள் 4 பேர், 2 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 394 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 287 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதில் 210 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீட்டிற்கு செல்பவர்களின் சதவீதம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இவர்களை தவிர 692 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களில் 10 சதவீதம் பேர் வீட்டுத்தனிமைப்படுத்துதலிலும், 80 சதவீதம் பேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும், மீதமுள்ள 10 சதவீதம் பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 77 வயது முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அதில் இருந்து குணம் அடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மதுரை மக்களுக்கு சற்று ஆறுதலான செய்தியாக இருக்கிறது.
Tags:    

Similar News