செய்திகள்
கோப்பு படம்

ஒரு வயது பெண் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - கோர்ட்டில் பெற்றோர் மனு

Published On 2019-10-12 15:31 GMT   |   Update On 2019-10-12 15:31 GMT
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, ‘கருணை கொலை’ செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி கோர்ட்டில் பெற்றோர் மனு கொடுத்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியை சேர்ந்த தம்பதி பாபுஜான்- சமீனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்ததால் ஏற்பட்ட அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கும் அதே அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. அவர்கள், குழந்தைக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு அதிகளவில் பணம் செலவாகிறது. நண்பர்களிடமும், இதுவரை ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பலன் அளிக்கவில்லை.

இந்தநிலையில் மதனப்பள்ளி கோர்ட்டில், கூலித்தொழிலாளியான பாபுஜான், மனைவி சமீனா ஆகியோர் சேர்ந்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில், தினமும் கூலி வேலை பார்த்து ரூ.300 சம்பாதிக்கும் என்னால், எனது பெண் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக, அதிகளவில் பணம் செலவழிக்க முடியவில்லை.

எனவே அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட என்னுடைய மகளை, கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். எனத் தெரிவித்திருந்தனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இது போன்ற மனுக்களை மாவட்ட கோர்ட்டில் தான் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு பாபுஜான், சித்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்குச் செல்லகூட என்னிடம் பணம் இல்லை. எனது குழந்தையை காப்பாற்ற யாராவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News