செய்திகள்
முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்.

உடுமலை வனப்பகுதியில் யானையை கொன்று தந்தத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது - மலைவாழ் மக்கள் முற்றுகையால் பரபரப்பு

Published On 2021-09-23 10:29 GMT   |   Update On 2021-09-23 10:29 GMT
யானையை கொன்று தந்தத்தை வெட்டி எடுத்தனரா? அல்லது இறந்து கிடந்த போது யானையின் தந்தத்தை வெட்டி எடுத்தனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட கரட்டூர், சடையம்பாறை பகுதியில் கடந்த மாதம் 29-ந்தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒற்றை தந்தத்துடன் இறந்து கிடந்தது. இதையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. 

உடலில் இரும்பு துப்பாக்கி குண்டுகள் இருந்தது. இதனால் யானை தந்தத்திற்காக கொல்லப்பட்டதா? அல்லது உடல்நல குறைவால் இறந்த யானையின் தந்தத்தை யாரேனும் வெட்டி எடுத்து சென்றனரா? என கண்டுபிடிக்க உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தந்தம் கடத்தல் கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூர் பகுதியில் உள்ள பாறை இடுக்கில் உர சாக்குபை ஒன்று இருந்தது. அதை வனத்துறையினர் சோதனை செய்த போது அதில் யானை தந்தம் இருந்தது. 

மேலும் அது ஒற்றை கொம்புடன் இறந்த யானையின் உடம்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது என தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கும்பலை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் யானை தந்தத்தை வெட்டி கடத்தி சென்றதாக குழிப்பட்டியை சேர்ந்த வேலு (வயது 17), சின்னதம்பி (20) ஆகிய 2 பேரை இன்று வனத்துறையினர் கைது செய்தனர். 

அவர்கள் யானையை கொன்று தந்தத்தை வெட்டி எடுத்தனரா? அல்லது இறந்து கிடந்த போது யானையின் தந்தத்தை வெட்டி எடுத்தனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

2பேர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் குழிப்பட்டி பகுதி பொதுமக்கள் உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News