செய்திகள்
கோப்புபடம்

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது

Published On 2019-12-07 10:36 GMT   |   Update On 2019-12-07 10:36 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித் சூர்யா, பிரதீப், ராகுல், முகமது இர்பான், மாணவி பிரியங்கா, அவர்களது பெற்றோர் உள்பட 10 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதி தவிர மற்ற 9 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மைனாவதி நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அவரது தந்தை ரவிக்குமார் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட புரோக்கர்கள் மற்றும் போலியாக தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும் சிக்காமல் இருந்து வந்தனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவர்கள் அனைவரும் சென்னையில் செயல்பட்டு வந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்தவர்கள் என்பதும், அவர்கள் ஒரே புரோக்கர் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருந்ததும் தெரிய வந்தது.

மாணவர்கள், அவர்களது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் புரோக்கர் ரஷீத், அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த புரோக்கர்கள் சிலரை போலீசார் தேடி வந்தனர். மாணவி பிரியங்கா மருத்துவ கல்லூரியில் சேர தர்மபுரியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு முருகன் என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. பெங்களூரில் பதுங்கி இருந்த அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து அவரை தேனிக்கு அழைத்து வந்தனர். மேலும் அவருடன் தொடர்புடைய மற்றொரு புரோக்கரான விஸ்வநாத் என்பவரையும் போலீசார் தேனிக்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் எத்தனை மாணவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்தீர்கள்? என்பது குறித்தும் தேர்வு எழுத எந்தெந்த பகுதி மாணவர்களை தேர்வு செய்தீர்கள்? என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் 2 பேரும் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News