செய்திகள்
முதலை

உடுமலை பண்ணையில் காயமடைந்த முதலைக்கு சிகிச்சை

Published On 2021-11-24 07:41 GMT   |   Update On 2021-11-24 07:41 GMT
சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக முதலைப்பண்ணை வளாகத்தில் சிறுவர் பூங்கா, வனவிலங்குகளின் மார்பளவு சிலைகள், உருவங்கள் சுவரில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டன் அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப்பண்ணை உள்ளது.

இங்குள்ள பண்ணையில்  96 சதுப்புநில முதலைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. அவற்றை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக முதலைப்பண்ணை வளாகத்தில் சிறுவர் பூங்கா, புல்தரை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், வனவிலங்குகளின் மார்பளவு சிலைகள், உருவங்கள் சுவரில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது முதலைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் அவை ஆக்ரோஷமாக காணப்படுவதுடன் இணை சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அப்போது ஏற்படுகின்ற மோதலில் ஒரு சில முதலைகளுக்கு சிறுசிறு காயங்களும் ஏற்படுகின்றது.  காயமடைந்த முதலையை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவர் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் முதலைகளை தீவிரமாக கண்காணிப்பதுடன் சண்டையில் ஈடுபடாதவாறு திசை திருப்பும் நடவடிக்கையையும் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News