செய்திகள்
கைதான இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் படத்தில் காணலாம்.

உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு வந்த 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2021-02-09 21:10 GMT   |   Update On 2021-02-09 21:10 GMT
ரெயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று பகலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் வந்த 2 வாலிபர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது கைகளில் கைப்பை வைத்திருந்தனர். இவர் களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இந்தியில் இருவரும் பேசினர். எங்கு செல்கிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டதற்கு சரியாக பதில் கூறாததால் இருவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். இதில் 3 கிலோ தங்க நகைகள் இருந்தன.

அவை அனைத்தும் பெண்கள் கழுத்தில் அணியும் தங்கச்சங்கிலிகள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சம் ஆகும். இவர்களிடம் தங்க நகைகள் எடுத்துச் செல்ல ரசீதோ அல்லது வேறு எந்த ஆவணங்களோ இல்லை. மேலும் நகைகள் பற்றி கேட்டதற்கு சரியான விளக்கம் தரவில்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து ரெயிலில் நகைகளை கடத்தி வந்த 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சிவராஜ் (வயது 22), பாகிராத் (30) என தெரியவந்தது. ரெயிலில் நகைகள் கொண்டு வந்து கைதான 2 பேர் குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News