வழிபாடு
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்

திருவாலங்காடு கோவிலில் 19-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா

Published On 2021-12-11 08:04 GMT   |   Update On 2021-12-11 08:04 GMT
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 19-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடராஜபெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாக திகழ்கிறது.

இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆருத்ரா தரிசன விழா எளிமையாக நடைபெற்றது. குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 19-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவையொட்டி வருகிற 19-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சகத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

இதன் பின்னர் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என பல வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று நடராஜபெருமான் ஆலமர பிரகாரத்தை வலம்வந்து கோபுர தரிசனத்திற்கு பின் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News