ஆன்மிகம்
குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2020-11-17 07:21 GMT   |   Update On 2020-11-17 07:21 GMT
குருப்பெயர்ச்சியையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதை குருப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குருபெயர்ச்சி நாளில் கோவில்களில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு 9.28 மணியளவில் குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயர்ந்தார்.

இதையொட்டி கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானுக்கும், சிவன் கோவில்களில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் நேற்று முன்தினம் காலை குரு பகவானுக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து குரு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு 9 மணிக்கு மேல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சரியாக இரவு 9.28 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்ததும் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் குருபெயர்ச்சியையொட்டி சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர்கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து குரு பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தீபம் ஏற்றி குருபகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜா குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News