ஆன்மிகம்
10 மினா உவமையும்.. விளக்கமும்..

10 மினா உவமையும்.. விளக்கமும்..

Published On 2021-10-20 05:02 GMT   |   Update On 2021-10-20 05:02 GMT
நற்செய்தியையும், உலக வாழ்வையும் கைக்குட்டையில் முடிந்துவைத்து வீணாக்கிய நமக்கு, தீர்ப்புநாளில் நிலைவாழ்வில் பங்கேற்கத் தகுதியில்லை என்பதை இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகிறார்.
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். வரும் வழிகளில் எல்லாம் நற்செய்தி அளித்துக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு, மக்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்.

“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவர, தொலைதூரத்தில் இருந்த நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்து பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன், நீர் வைக்காததை எடுக்கிறவர், நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார்.

அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன், வைக்காததை எடுக்கிறவன், விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் ஏற்கனவே பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள். அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார்” என்றதோடு அந்த உவமையை இயேசு முடித்தார்.

நற்செய்தியையும், உலக வாழ்வையும் கைக்குட்டையில் முடிந்துவைத்து வீணாக்கிய நமக்கு, தீர்ப்புநாளில் நிலைவாழ்வில் பங்கேற்கத் தகுதியில்லை என்பதை இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகிறார்.

நற்செய்தியை உள்வாங்கி தாழ்மையும், அன்பும், இரக்கமும் உள்ளவருக்கு தீர்ப்பு நாளில் மிகுதியாகவே கொடுக்கப்படும் என்பதும், அன்பும், முயற்சியும் இல்லாதவரிடமிருந்து, உள்ளதும் எடுக்கப்படும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.
Tags:    

Similar News