செய்திகள்
ராகேஷ் திகைட்

29-ந்தேதி 60 டிராக்டர்கள், 1000 விவசாயிகள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாய சங்கத் தலைவர்

Published On 2021-11-24 06:52 GMT   |   Update On 2021-11-24 06:52 GMT
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ள போதிலும், விவசாயிகள் திட்டமிட்டபடி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தன்னிச்சையாக நிறைவேற்றியது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.

குறிப்பாக வட இந்தியாவில் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். பலகட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர தயாராக இருந்த நிலையில், சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது.

ஆனால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்தனர். வேளாண் சட்டங்களுக்காக 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்தான், கடந்த வாரம் (19-ந்தேதி) குருநானக் ஜெயந்தி அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

மோடியின் அறிவிப்பை தொடர்ந்து ‘‘அரசால் திறந்து விடப்பட்டுள்ள சாலைகளில் டிராக்டர்கள் செல்லும். சாலைகளை மூடி வைத்திருப்பதாக நாங்கள் குற்றம் சாட்டினோம். நாங்கள் சாலைகளை மறிக்கவில்லை. எங்களுடைய நிலை சாலைகளை மறிப்பது என்பது அல்ல. அரசிடம் பேச வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைட் தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தனர்.



அதன்படி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதை வலியுறுத்தும் வகையில் 60 டிராக்டர்கள், 1000 விவசாயிகள் பங்கேற்கும்  பேரணி பாராளுமன்றத்தை நோக்கி நடைபெறும் என ராகேஷ் திகைட் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. நாளைமறுதினம் ஒரு வருட நீண்ட போராட்டத்தை நிறைவு  செய்யும் வகையில் எராளமான விவசாயிகள் டெல்லியில் திரளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி டிசம்பர் 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News