செய்திகள்
குளம்

குமரி மாவட்டத்தில் 276 குளங்கள் நிரம்பின

Published On 2020-09-12 10:37 GMT   |   Update On 2020-09-12 10:37 GMT
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 276 குளங்கள் நிரம்பின. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63 அடியை நெருங்குகிறது.
நாகர்கோவில்:

குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நாகர்கோவில் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. அதே சமயத்தில் பகலில் வெயில் இருந்தது. பிற்பகலுக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் நாகர்கோவிலில் பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 5.2, பெருஞ்சாணி- 9.2, சிற்றார் 1- 3.2, சிற்றார் 2-6, புத்தன் அணை- 9, மாம்பழத்துறையாறு- 9, முக்கடல்- 4.2, பூதப்பாண்டி- 4.2, களியல்- 8.6, கன்னிமார்- 9.2, கொட்டாரம்- 19.2, குழித்துறை- 12.4, மயிலாடி- 12.2, நாகர்கோவில்- 8.2, சுருளக்கோடு- 14.4, குளச்சல்- 11.6, இரணியல்- 14.6, பாலமோர்- 16.4, மாம்பழத்துறையாறு- 9, ஆரல்வாய்மொழி- 2, கோழிப்போர்விளை- 10, அடையாமடை- 7, குருந்தங்கோடு- 15.8, முள்ளங்கினாவிளை- 7, ஆனைக்கிடங்கு- 8.4 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையால் நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 549 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 426 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 526 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 61 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 85 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 4 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு ஒரு கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 30.40 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 62.85 அடியாகவும் இருந்தது. இன்று இந்த அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு (நீர்வள ஆதார அமைப்பு) சொந்தமான குளங்கள் மொத்தம் 2,040 உள்ளது. அவற்றில் 276 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 90 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள குளங்களாக 201-ம், 80 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள குளங்கள் 339-ம், 70 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள குளங்கள் 351-ம், 50 முதல் 70 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ள குளங்கள் 450-ம், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் தண்ணீர் உள்ள குளங்கள் 326-ம், 25 சதவீதத்துக்கு குறைவாக தண்ணீர் உள்ள குளங்கள் 88-ம், தண்ணீரே இல்லாத குளங்கள் 8-ம் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழை விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், நெல் வயல்கள் மற்றும் வாழைத்தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்று பயிர்களை நாசமாக்கிவிடுமோ? என்ற அச்சமும் அவர்களிடம் இருந்து வருகிறது.
Tags:    

Similar News