செய்திகள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளிக்கும்போது எடுத்தபடம்.

வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை- கமல்ஹாசன் புகார்

Published On 2021-04-21 02:14 GMT   |   Update On 2021-04-21 02:14 GMT
தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்திற்கு கமல்ஹாசன் நேற்று வந்தார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அவர் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாக்குப்பதிவின் போது, ஒரே நபர் வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வாக்களித்துள்ளார். இதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள், தோல் ஒவ்வாமை என்று கூறி நகத்தில் மட்டும் மை வைத்துக்கொள்கின்றனர். பின்னர் அதை அழித்துவிட்டு அடுத்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கின்றனர். எனவே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மேலும் துல்லியமாக்கப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைப்பதற்கு கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது. வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் இருக்கும் வளாகங்களில் சி.சி.டி.வி. அடிக்கடி வேலை செய்யாமல் போவது, திடீரென்று வைபை வசதிகள் உள்ளேயும், வெளியேயும் உருவாவது. மடிக்கணினியுடன் சிலர் அங்கு நடமாடுவது. கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களை வளாகத்திற்குள் கொண்டு வருவது போன்ற சம்பவங்கள் அச்சத்தையும், குழப்பத்தையும், கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன.

கோவை ஜி.சி.டி. கல்லூரி, திருவள்ளூர் பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வெளியாட்களை அனுமதிக்காமல், பாதுகாப்பு அறையின் உள்பகுதிகள் தெளிவாக தெரியும் வகையில் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

30 சதவீத வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில்லை. வாக்குப்பதிவிலும், வாக்கு எண்ணிக்கையிலும் இதுபோன்ற சந்தேகம், மர்மங்கள் நீடித்தால், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இன்னும் குறைந்துவிடும்.

இதுபோன்ற புகார்களை அளிப்பது முதல் கட்டம்தான். இந்த புகார்கள் இன்னும் எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. அவற்றையும் திரட்டி கொண்டு வர இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றும் முயற்சியுடன் ஜனநாயகத்தையும் காப்பாற்றவும் முயற்சிக்கிறோம்.

எங்கள் கட்சியின் முகவர்கள் அளித்த புகாரின் சாராம்சம்தான் இது. தேவையற்ற நேரங்களில் சில வாகனங்கள் வருவது, அறிவிக்கப்படாத சில கட்டிடப் பணிகள் அந்த வளாகத்திற்குள் நடப்பது போன்றவையெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

வாக்குப்பதிவு எந்திரத்தை கால்குலேட்டர் போன்றது என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினாலும், அது ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தை புனிதமானது என்று கூறிவிட முடியாது. அந்த திருத்தன்மையை அது இழந்திருக்கிறது.

ஏனென்றால் அது கண்டவர் கையிலும் நடமாடுகிறது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. புகாராக மட்டுமல்லாமல், பாதுகாப்பை மேம்படுத்தி சீரமைப்பது குறித்த பரிந்துரைகளையும் அளித்துள்ளோம்.

விருந்தில் எந்த இடத்திலும் உண்ணத்தகாத பொருளை வைக்கக்கூடாது. சாப்பிடும் இலையில் அது வரக்கூடாது. எனவே குறிப்பிட்ட சில இடத்தில்தானே பிரச்சனை என்று எண்ணக்கூடாது. 4 மையங்களில் மட்டுமே இப்படி நடந்தாலும், 75 மையங்களிலும் பிரச்சினை இருப்பதாகவே கருத வேண்டும். அஜாக்கிரதையாக விட்டுவிடக் கூடாது.

சைக்கிளில் நடிகர் வந்ததையும், குறிப்பிட்ட வண்ண முக கவசத்தை நடிகர் அணிந்ததையும் பற்றி நீங்கள் கேட்டால், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் அவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News