செய்திகள்
பாலமோர் - கூவக்காடு சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

மலை கிராமத்தில் ரூ.45 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

Published On 2021-06-19 15:40 GMT   |   Update On 2021-06-19 15:40 GMT
சுருளக்கோடு ஊராட்சியில் மலை கிராமத்தில் ரூ.45 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
குலசேகரம்:

திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பாலமோர் முதல் கூவக்காடு மலைப்பகுதி வரை 1.6 கி.மீ அளவில் சாலையை சீரமைக்க மூலதன திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது வனத்துறையினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பணியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், சுருளக்கோடு ஊராட்சி தலைவர் விமலா சுரேஷ், வட்டார பொறியாளர் ரிஜன், கேட்சன், வார்டு உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொன்மனை கிராமம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் நவீன புல்வெட்டும் கருவி, பவர் வீடர் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், வீயன்னூர், அருவிக்கரை மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் கருவிகளையும், பொன்மனை மற்றும் மங்கலம் பகுதி விவசாயிகளுக்கு ஒட்டுரக தென்னை கன்றுகள் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரம் போன்ற இடுப்பொருட்களையும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு எந்திரங்களின் செயல் விளக்கத்தினை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (வேளாண்மை) சத்தியஜோஸ், துணை இயக்குனர் (வேளாண்மை) அவ்வை மீனாட்சி, திருவட்டார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரபோஸ், தாசில்தார் ரமேஷ், திருவட்டார் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஜெகன்ஸ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News