ஆன்மிகம்
இஸ்லாம்

விட்டுக்கொடுத்து வாழ்வோம்

Published On 2020-11-03 08:34 GMT   |   Update On 2020-11-03 08:34 GMT
எங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.
உலகில் ஏற்படும் அத்தனைப் பிரச் சினைகளுக்கும் மனிதர்களிடையே ஏற்படுகின்ற மனமாச்சரியங்களும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற மனப்பாங்குதான் காரணமாக அமைகின்றது. வீட்டுச்சூழ்நிலையில் தந்தை மகனைக் குற்றம் சுமத்துவதை பெரும் பாலான குடும்பங்களில் காணமுடியும். அதுபோல் மாமியார், மருமகள் இருவருமே சின்ன விஷயங்களில் பிணங்கிக்கொண்டு வாழ்வதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

இந்த குற்றம் பார்க்கின்ற குணத்தால்பெற்றோரோடு பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாத எத்தனையோ பிள்ளைகளை இந்த தலைமுறையில் நாம்காண்கிறோம். மனம் திறந்து பேசினால்தீர்ந்து விடுகின்ற சின்னப் பிரச்சினைகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற காரணத்தால்தீர்வே இல்லாத பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கிறது மாமியார்-மரு மகளிடையே உள்ள பிரச்சினைகள் காரணமாக மகனாகவோ கணவனாகவோ வாழ முடியாத நிலையில், எத்தனையோ ஆண்கள் மன அழுத்தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

தொழில்நிறுவனங்களைப் பொருத்தவரை சில மேலதிகாரிகள் தன் கீழுள்ள பணியாளர்களை குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாய் இருப்பதுண்டு. மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதையும் அதனால் பலர் வாழ்வு இருண்டு விடுகின்ற அபாயத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் செய்கின்ற தவறுகளைத்தானே குற்றம் கண்டு அதனைத்தவிர்ந்து வாழ அறிவுரை சொல்கிறோம்என்று பலர் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒருவர் வாழ்வு சிதைந்து போவதற்கு காரணமான ஒரு செயல்அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடியதல்ல.

பங்காளி சண்டைகளில் ஏற்படும் உறவுவிரிசல்கள் பரம்பரையைத் தாண்டி நிலைத்திருப்பதற்கு, ‘குற்றம் சுமத்துகின்ற செயல்’ காரணமாகி உள்ளதை பலர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தான் தலைமுறைத்தாண்டி பகை உணர்வுகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை சிந்தித்தாலே அதில்பெரும் தவறு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அருள்மறை திருக்குர்ஆன் இதுபோன்ற செயல்களை பெரும் பாவமாக சித்தரிக்கின்றது.

அதற்காக ஒருவரை குற்றம் காணக்கூடாது என்ற வரையறையையும் அது சொல்லவில்லை. மற்றவன் துரோகத்தால் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற நிலையில், அவனுக்கு நியாயம் கிடைக்க அந்த துரோகத்தை சொல்லிக் காட்டுவதை இறைமறை தடை செய்யவில்லை. நீதியின் முன்பு அதனை எடுத்துச் சொல்லிநிவாரணம் தேட அல்லாஹ்வும் அனுமதிஅளித்துள்ளான்.

அதனை அருள்மறை இவ்வாறு விவரிக்கிறது: “அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர மற்றெவரும் யாரைப்பற்றியும் பகிரங்கமாக குற்றம் சுமத்துவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ், செவியுறுபவனும் நன்கு அறிந் தவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 4:148)

இது ஒருபுறம் இருந்தாலும், தானே அந்த குற்றத்தைச் செய்து விட்டு பிறர்மீது பழியைப்போட்டு, அவர் வாழ்க்கையை சிதைக்கின்ற செயல்பாடுகளும் அதிக அளவில் காணப்படுகின்றது. இது குற்றம் காண்பது என்ற நிலையைத் தாண்டி அவதூறு செய்கின்ற பெரும் பாவத்திற்கு அடிகோலிடுகிறது. இது பெரும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அருள்மறை இவ்வாறு சொல்கிறது:

“எவரேனும் யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து, அதனை தான் செய்யவில்லை என்று மறைத்து, குற்றமற்ற மற்றொருவர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய் யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான்”. (திருக்குர்ஆன் 4:112)

இப்படிபட்ட பாவங்களின் வீரியம் தெரியாமல் பலர் அதனை மிக சாதாரணமாக கையாளுகின்ற நிலைமை மிகவும் ஆபத்தானது. ஒருவருக்கு துரோகம் செய்வது சமுதாய கட்டமைப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இதைப்பற்றி இன்னொரு இடத்திலே இறைவன்குறிப்பிடும் போது;

“எவர்கள்நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும், அவர்கள் செய் யாத குற்றத்தை செய்தார்கள் என்று கூறி துன்புறுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றனர்” (திருக்குர்ஆன் 33:58)

தனிக்குடித்தனங்கள் மிக அதிகமான அளவில் பெருகிவிட்ட இந்த கால சூழ்நிலையில் கணவன்-மனைவி என்ற இருவர் மட்டுமே வாழக்கூடிய நிலைமையில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களால் மாறுபட்டு குற்றம் சுமத்தி மன அழுத்தங்களால்பாதிக்கப்பட்டு பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து வழக்குகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று விட வேண்டும்என்பதற்காக கணவனும் மனைவியுமே ஒருவரைஒருவர் குற்றம் சுமத்துவது வாடிக்கையாகியுள்ளது.அதனையும் இவ்வாறு கண்டிக்கின்றான் அல்லாஹ்:

“எவர்கள் கள்ளம் கபடமில்லாத நம்பிக்கையாளரான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும்மறுமையிலும் இறைவனுடைய சாபத்திற்குள்ளாவார்கள். அன்றியும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு”(திருக்குர்ஆன் 24:23)

எங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.

அஸ்ரா உமர் கத்தாப், சென்னை.
Tags:    

Similar News