ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு

Published On 2021-09-18 03:07 GMT   |   Update On 2021-09-18 03:07 GMT
திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக, அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி சாதாரணப் பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதித்து வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது, கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி அனைத்து வாகனச் சேவைகளும் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் ஏகாந்தமாக நடைபெறும்.

எனினும், பிரம்மோற்சவ விழாவின்போது கோவிலில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதே நிலை இன்னும் சில காலம் தொடரும்.

சமீப காலமாக இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதியில் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் இலவச தரிசன டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது தொழில் நுட்ப கோளாறால் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது கால தாமதம் ஆகிறது. அந்தத் தொழில்நுட்ப கோளாறு சரியானதும் மிக விரைவில் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News