செய்திகள்
பீரோவை திறந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட காட்சி.

மீஞ்சூர் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டில் 400 பவுன் நகை கொள்ளை

Published On 2020-01-10 05:24 GMT   |   Update On 2020-01-10 05:24 GMT
மீஞ்சூர் அருகே பாரதிய ஜனதா நிர்வாகி வீட்டில் இருந்து 400 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன். பாரதிய ஜனதாவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி உஷா.

ஜானகிராமனின் தம்பி மகள் திருமணம் வருகிற 20-ந் தேதி சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் இருந்த ஜானகிராமனின் மகனும், மருமகளும் வந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் வீட்டை பூட்டி விட்டு ஜவுளி எடுப்பதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இரவு அவர்கள் சென்னையில் உள்ள தம்பியின் வீட்டில் தங்கி இருந்தனர். இன்று காலை அவர்கள் மேட்டுபாளையத்துக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 5 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 400 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

திருமணத்துக்காக லாக்கரில் இருந்த நகைகளை அவர்கள் நேற்று தான் எடுத்து வீட்டில் வைத்து இருந்தனர். இதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்த மருமகளின் நகையும் மொத்தமாக பீரோவில் இருந்து உள்ளது.


இந்த நகைகளை தான் கொள்ளையர்கள் சுருட்டிச் சென்றுள்ளனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.

ஜானகிராமன் தங்கி இருப்பது பங்களா வீடாகும். வீட்டின் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் கட்டிடம் நன்றாக வெளியில் தெரிந்தது.

அவர்களது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாததால் அவர்களும் அருகில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். இதுவும் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

கொள்ளையர்கள் ஜானகிராமனின் வீட்டில் அதிக அளவு நகை இருப்பதை அறிந்தே திட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளார்கள். எனவே இதில் ஈடுபட்டது அவர்களது வீட்டுக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜானகிராமன் வீட்டில் கண்காணிப்பு கேமிரா இல்லை. எனவே கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா நிர்வாகி வீட்டில் 400 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News