லைஃப்ஸ்டைல்
ஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்

ஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்

Published On 2020-06-02 03:13 GMT   |   Update On 2020-06-02 03:13 GMT
ஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிக்கும் பழக்கமும் உயிர்பெற்று உள்ளது. புத்தகங்களை படிக்க சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கையும் மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். அப்படி வீடுகளில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் பொழுதை போக்க பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். என்னதான் டி.வி.க்களை பார்த்தும், செல்போனில் பேசியும் பொழுதை ஓட்டினாலும் ஏதோ ஒரு சுணக்கம் ஏற்படத்தான் செய்கிறது.

இதனால் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, திருமண ஆல்பங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவது, குழந்தைகளுடன் விளையாடுவது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு பொதுமக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மக்களின் கவனம் புத்தகம் வாசிப்பிலும் திரும்பி இருக்கிறது. நாகரிக மாற்றங்களாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மக்கள் புத்தகங்களையே மறந்து கிடந்தனர். பள்ளி மாணவர்களும், புத்தக பிரியர்களுமே புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டி வந்தனர்.

தற்போது ஊரடங்கால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து சலித்து போன கண்கள் தற்போது மீண்டும் புத்தகங்கள் மீது படர தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் தேவையற்ற பொருட்களுடன் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட புத்தகங்களை கவனிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பழைய புத்தகங்களை தேடி கண்டுபிடித்து வாசிக்க தொடங்கியிருக்கிறார்கள். அலமாரிகளில், பரணில், ஸ்டோர் ரூமில் என கண்ணில் பட்ட இடங்களில் இருக்கும் புத்தகங்களை பொறுக்கி எடுத்து படிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

பள்ளிகல்லூரி காலகட்டத்தில் சுமையாக தெரிந்த புத்தகங்களும், அதிலுள்ள கதைகளும் தற்போது சுகமான நினைவுகளாக படிக்க படிக்க ஆனந்தம் தரக்கூடியதாக அமைகிறது. இதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தாங்கள் படிக்கும் மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், ராமாயணம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் நாடோடி கதைகள் போன்றவற்றையும் படித்து பார்க்குமாறு இளைஞர்களுக்கு கூறுகிறார்கள். இளைய தலைமுறையினரும் அந்த புத்தகங்களை படித்து ஆர்வத்தில் அசந்து போகிறார்கள். பலரது வீடுகளில் ஆன்-லைன் வழியாகவும் சிறுகதைகள், துணுக்குகள் போன்ற கதைகளையும் விரும்பி படித்து வருகிறார்கள்.

எப்போதெல்லாம் புத்தக கண்காட்சி அமைக்கிறார்களோ, அப்போது மட்டுமே புத்தகங்கள் வாங்கவேண்டும், படிக்கவேண்டும் என்ற ஆவல் நம்மிடையே எழும். உண்மையிலேயே புத்தகங்கள் என்பது நமது அறிவு பசிக்கு தீனி போடுவதாக அமைகிறது என்பதே உண்மை. அது இந்த ஊரடங்கு காலத்திலேயே உண்மையாகி போயிருக்கிறது. பொழுதுபோக்கு என நினைத்து கையில் கிடைத்த புத்தகத்தை படிக்க தொடங்கிய மக்கள் இப்போது ஏதாவது புத்தகம் இருக்காதா? என்று வீட்டை சலித்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவு சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் புத்தகங்கள் படிக்கிறார்கள். இது தங்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இதுதவிர சரித்திர கால நிகழ்வுகள் மற்றும் பேரரசர்கள் வாழ்க்கை குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்க விருப்பப்படுகிறார்கள். இதனால் ஆன்லைன் வழியாக பழைய கால புத்தகங்களையும் தேடி பிடித்து ஆசை தீர படித்து வருகிறார்கள். ஊரடங்கு காலம் பல விபரீதங்களை ஏற்படுத்தினாலும் சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தி தான் விட்டிருக்கிறது, என்பதே உண்மையாக இருக்கிறது.
Tags:    

Similar News