செய்திகள்
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைப்பு

Published On 2021-03-04 22:51 GMT   |   Update On 2021-03-04 22:51 GMT
சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலக கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலக கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு மாதிரி வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது.

இந்தநிலையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்குவதற்கும், வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளவும் பாதுகாப்பு கிடங்கில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் முன்னிலையில் எந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன், 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய தேர்தல் நடத்தும்அதிகாரிகளுக்கு மின்னணு மாதிரி வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து வழங்கினார்.

அதன்படி 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 167 வாக்குப்பதிவு எந்திரங்கள், 167 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 167 விவிபேட் எந்திரங்கள் ஆகியவை பிரித்து வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட 100 விவிபேட் எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதிக்கும் வழங்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தின் முன்பு வைத்து வாக்காளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

இதில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பொறுப்பு அதிகாரி குணசேகரன், தேர்தல் தாசில்தார் முருகதாஸ், தெற்கு தாசில்தார் சுந்தரம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News