செய்திகள்
ஆர்யன் கான்

மகனை விடுவிக்க ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பறிக்க முயற்சி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியிடம் விசாரணை

Published On 2021-10-28 04:11 GMT   |   Update On 2021-10-28 04:11 GMT
மகனை விடுவிக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பறிக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உயர் அதிகாரியான சமீர் வான்கடே உள்ளிட்டவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை:

மும்பை- கோவா சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல ஏறி அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடத்தப்பட்ட இந்த சோதனையில் போதை விருந்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (வயது 23), அவரது நண்பர் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு பிறகு மறுநாள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதில் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கு மத்தியில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனை போலியானது என்று மகாராஷ்டிரா சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நாவாப் மாலிக் கூறினார். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சமீர் வான்கடேயை சிறையில் தள்ளாமல் ஓயமாட்டேன் என்றும் கூறினார். மந்திரி நவாப் மாலிக்கின் உறவினர் சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யன் கான் வழக்கில் மற்றொரு திருப்பமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியான கோசவியின் உதவியாளர் பிரபாகர் சாயில் அணுகுண்டை தூக்கிபோட்டார். ஆர்யன் கானை விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி கேட்டு லஞ்ச பேரம் பேசியதாக கூறிய அவர், அதிகாரி சமீர் வான்கடே முன்னிலையில் தன்னிடம் 10 வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு ஆர்யன் கான் வழக்கை நடத்தி வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு, குறிப்பாக அதன் உயர் அதிகாரியான சமீர் வான்கடேக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த பணம் பறிப்பு முயற்சி தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் டெல்லி (தலைமை அலுவலகம்) அதிகாரிகள் 5 பேர் நேற்று காலை மும்பை வந்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவின் வட மண்டல துணை இயக்குனர் ஜெனரல் ஞானேஸ்வர் சிங் தலைமையிலான இந்த குழுவினர், பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகம் சென்று, அதிகாரி சமீர் வான்கடேயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதேபோல மேலும் சில அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் ஷாருக்கானிடம் பணம்பறிப்பு குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி வடமண்டல துணை இயக்குனர் ஜெனரல் ஞானேஸ்வர் சிங் நிருபர்களிடம் கூறுகையில், “சமீ்ர் வான்கடே உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகிறோம். இது தீவிரமான பிரச்சனை என்பதால், விசாரணை விவரத்தை பகிரங்கப்படுத்த முடியாது” என்றார்.

இதைபோல ஷாருக்கானிடம் பணம் பறிப்பு முயற்சி விசாரணையை மும்பை போலீசாரும் கையில் எடுத்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்த பிரபாகர் சாயிலை விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி அவர் ஆசாத் மைதானில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஆஜரானார். நேற்று அதிகாலை வரை சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து மும்பை போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனர்.

இதன் மூலம் தனது துறையை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மும்பை போலீசார் என இரு தரப்பில் இருந்தும் உயர் அதிகாரி சமீர் வான்கடேக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவர், நடிகை கிராந்தி ரெட்கரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News