செய்திகள்
கோப்பு படம்.

காயல்பட்டினத்தில் வங்கி அதிகாரிக்கு கத்திக்குத்து- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-10-14 14:37 GMT   |   Update On 2020-10-14 14:37 GMT
காயல்பட்டினத்தில் வங்கி அதிகாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற, வங்கி பெண் ஊழியரின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறு முகநேரி:

தூத்துக்குடி பிரயன்ட் நகரை சேர்ந்தவர் அருண்நித்திய குமார்(வயது25). இவர், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவிமேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது, அவருக்கும், அங்குள்ள பெண் ஊழியருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அருண்நித்தியகுமார் காயல்பட்டினத்திலுள்ள அந்த வங்கியின் கிளைக்கு மாறுதலாகி வந்து பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து வங்கியின் முன்பு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய மாப்பிள்ளையூரணி கிளையிலுள்ள பெண் ஊழியரின் கணவரான தூத்துக்குடி தாளமுத்து நகர் கிழ அழகாபுரி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகானந்தம் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் 2 பேரும் அருண்நித்தியகுமாரிடம் திடீரென தகராறு செய்து, அவரை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர், அதை தடுத்த அருண்நித்தியகுமாரின் உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கத்தியால் குத்திய 2 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்த அருண்நித்தியகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக, அருண்நித்தியகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஆறு முகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் உள்ளிட்ட 2 பேரையும் தேடிவருகிறார். வங்கி முன்பு அதிகாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் காயல்பட்டினம், ஆறுமுநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News