செய்திகள்
தென்பெண்ணை ஆற்றின் கொமந்தான்மேடு தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்- கொமந்தான்மேடு தடுப்பணை உடைந்தது

Published On 2021-11-22 06:40 GMT   |   Update On 2021-11-22 06:40 GMT
பாகூர் நகரப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பாகூர்:

தமிழகத்தில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாகூர் அருகிலுள்ள தமிழகப் பகுதியில் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் சித்தேரி அணைக்கட்டிலிருந்து வடிகால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் பாகூர் பகுதியிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

சாலைகள், வீடுகள், மரம், விவசாயம், கால்நடைகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பாகூர் நகரப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் வடிந்து வரும் நீர் மணப்பட்டு, காட்டுக்குப்பம், உச்சிமேடு ஆகிய ஏரிகளில் நிரம்பி பாக்கியலட்சுமி நகர், சப்தகிரி நகர், சீனிவாசா நகர், உச்சிமேடு, பள்ள கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது.

தற்பொழுது அப்பகுதியில் தண்ணீர் வடிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் சுமார் 7½ அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடுகிறது. கடும் வெள்ளப்பெருக்கால் தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கம் பாலத்தின் 2 கரைகளும் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பாலமும் சேதமடைந்து விட்டது. இந்த நிலையில் பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணையில் 2 கரையிலும் சுமார் 100 மீட்டருக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் நடுவிலும் உள்ள தடுப்பணை சேதமாகி இருக்கக்கூடுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அணை 3-வது முறையாக உடைந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தடுப்பணையில் சேமித்து வைக்கவேண்டிய பல லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கும். கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News