செய்திகள்
கோப்புப்படம்

காற்றின் தரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-01-12 10:02 GMT   |   Update On 2021-01-12 10:02 GMT
போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் இப்போது போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்றுமாசு ஏற்படுகிறது. மேலும், இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News